என் மலர்
நீங்கள் தேடியது "சுற்றுலா பயணிகள்"
- ஆண்டுதோறும் கோடை கால தொடக்கத்தில் ஊட்டிக்கு வரும் நாரைகள், சுமார் 3-4 மாதங்கள் வரை இங்கேயே தங்கியிருக்கும்.
- ஊட்டி ரேஸ்கோர்ஸ் புல்வெளிகளில் முகாமிட்டு உள்ள இந்த நாரைகள், நகரின் அதிகாலைநேரங்களை இன்னும் அழகாக மாற்றுகின்றன.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் ஊட்டியின் அடையாளமாக திகழும் ரேஸ்கோர்ஸ் பகுதியில் தற்போது வெளிநாட்டு பறவைகள் அதிக அளவில் முகாமிட்டு வருகின்றன.
இந்த காட்சிகள் அங்கு வரும் சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு மட்டுமல்ல, உள்ளூர் மக்களின் காலை நேர ரம்மியத்துக்கும் ஒரு அபூர்வ காட்சியை வழங்குகிறது. ஊட்டி ரேஸ்கோர்ஸ் புல்வெளிகளில் வெண்ணிற மலர்கள் போல பரவி நிற்கும் வெள்ளை நாரைகள், கண்களை ஈர்க்கும் சிவப்பு நிற கால்களுடன் உலா வருகின்றன. அந்த பகுதியில் இயற்கையாக உருவான சதுப்பு நிலங்களும், ஈர புல்வெளிகளும் அவைகளின் வாழ்வாதார முகாமாக மாறியுள்ளன.
மேலும் கூட்டமாக இரை தேடும் நாரைகள் தங்களுக்கே உரிய ஒலிகளால் ஒன்றோடு ஒன்று உரையாடும் காட்சி, பார்வையாளர்களின் மனதை பெரிதும் கவர்ந்து வருகிறது.
ஆயிரக்கணக்கான மைல்களை கடந்து வரும் இந்த நாரைகள் அனைத்தும் வெள்ளை நிற இனத்தை சேர்ந்தவையே.
இமயமலை, விந்திய மலைத்தொடர் மற்றும் சத்பூரா மலைத்தொடர் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவுக்கு பயணித்து, கோடை கால தொடக்கத்தில் ஊட்டிக்கு வந்தடைகின்றன.
ஆண்டுதோறும் கோடை கால தொடக்கத்தில் ஊட்டிக்கு வரும் இந்த நாரைகள், சுமார் 3-4 மாதங்கள் வரை இங்கேயே தங்கியிருக்கும். இந்த காலகட்டத்தில் அவை இனப்பெருக்கத்தில் ஈடுபடுகின்றன. பின்னர் அவை மீண்டும் தங்கள் பழைய வாழிடங்களை நோக்கி பறந்து செல்கின்றன.
ஊட்டி ரேஸ்கோர்ஸ் மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள 'கிக்கியூ' புல்வெளி பகுதிகளில் புழு-பூச்சிகள் மற்றும் சிறு உயிரினங்களை உணவாக்கி கொள்ளும் இந்த நாரைகள், சதுப்பு நிலங்களில் மெதுவாக சுழன்று, தரையை உற்று நோக்கி உணவுத் தேடும் காட்சி, இயற்கையின் ஒழுங்கை உணர்த்துவதாக அமைந்து உள்ளது.
"சுற்றுலாப் பயணிகளுக்கு மட்டுமா இந்த ஊட்டி சொந்தம்? நாங்களும் சுற்றுலாவாகத்தான் இங்கு வந்து தேனிலவு கொண்டாடுகிறோம்" என்று சொல்லாமல் சொல்லும் வெள்ளை நாரைகள், அதிகாலை நேரங்களை சினேகமாக்கும் இயற்கை நண்பர்களாக உள்ளன.
நீலகிரி மாவட்டம் முழுவதும் சுற்றுலாப் பயணிகளின் வருகையால் எப்போதும் களைகட்டி இருக்கும். இந்த நிலையில் ஊட்டி ரேஸ்கோர்ஸ் புல்வெளிகளில் முகாமிட்டு உள்ள இந்த நாரைகள், நகரின் அதிகாலைநேரங்களை இன்னும் அழகாக மாற்றுகின்றன.
ஊட்டி சுற்றுலா பயணிகளின் கேமராவில் மட்டுமின்றி உள்ளூர் மக்களின் மனங்களிலும், இந்த பருவகால பறவைகளின் பரவச முகாமிடல் பார்வையாளர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்து வருகின்றன.
- நேற்று முன்தினம் இரவு பெய்த மழையின் காரணமாக பழைய குற்றால அருவிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது.
- சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லாததால் அருவி கரையானது வெறிச்சோடி காணப்படுகிறது.
தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு பல்வேறு இடங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் மழை பெய்தது. கடந்த சில நாட்களாக பகலில் வெயில் சுட்டெரித்து வந்ததால் ஐந்தருவி, மெயின் அருவி வறண்டு காணப்பட்ட நிலையில் நேற்று ஐந்தருவி, மெயின் அருவியில் தண்ணீர் விழத் தொடங்கியது. 2 அருவிகளிலும் பெரிய அளவில் தண்ணீர் விழவில்லை என்றாலும், பழைய குற்றால அருவியில் மட்டும் தண்ணீர் அதிகரித்து விழுந்தது.
சில மாதங்களுக்கு முன்பு கனமழை காரணமாக பழைய குற்றால அருவி பகுதியில் கடுமையான சேதம் ஏற்பட்டது. இதனால் அங்கு 3 மாதங்களுக்கு மேலாக சீரமைப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.
தற்போது சீரமைப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அதனை மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் கடந்த வாரம் நேரில் சென்று பார்வையிட்டார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழையின் காரணமாக பழைய குற்றால அருவிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது. எனினும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லாததால் அருவி கரையானது வெறிச்சோடி காணப்படுகிறது.
தற்போது கடுமையான கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் பழைய குற்றால அருவியில் மட்டும் நீர் விழுந்து வருவதால் விரைந்து சீரமைப்பு பணிகளை முடித்து சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது .
- மலைப்பாதைகளில் சாலையோரங்களில் உள்ள தோட்டங்களிலும் வேலிக்காக சங்கு பூச்செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளது.
- பூச்செடிகளில் இளஞ்சிவப்பு, மஞ்சள், வெள்ளை நிறங்களில் சங்கு பூக்கள் பூத்துக்குலுங்குகின்றன.
பெரும்பாறை:
மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். கொடைக்கானல் மலைப்பகுதியில் ஒவ்வொரு காலநிலைக்கு ஏற்ப மரம், செடிகளில் பல்வேறு வண்ணப்பூக்கள் பூத்து கவர்ந்திழுப்பது வழக்கம். அதன்படி, தற்போது கொடைக்கானல் நகர்ப்பகுதி, மலைப்பாதைகள் மற்றும் கிராமங்களில் சங்கு பூக்கள் பூத்துக்குலுங்குகின்றன.
குறிப்பாக கொடைக்கானல் கீழ்மலை கிராமங்களான பெரும்பாறை. தாண்டிக்குடி, பண்ணைக்காடு, மங்களம்கொம்பு, புல்லாவெளி, கே.சி. பட்டி உள்ளிட்ட பகுதிகளில் காபி, வாழை, மிளகு போன்ற பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதனால் தோட்டங்களுக்குள் யாரும் செல்லாமல் இருக்க வேலிக்காக சங்கு பூச்செடிகளை விவசாயிகள் நடவு செய்துள்ளனர். அதேபோல் மலைப்பாதைகளில் சாலையோரங்களில் உள்ள தோட்டங்களிலும் வேலிக்காக சங்கு பூச்செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது அந்த பூச்செடிகளில் இளஞ்சிவப்பு, மஞ்சள், வெள்ளை நிறங்களில் சங்கு பூக்கள் பூத்துக்குலுங்குகின்றன. இவை சாலையோரங்களில் மின் விளக்குகளை தோரணங்களாக கட்டிவிடப்பட்டது போன்று சுற்றுலா பயணிகளை கவர்ந்துள்ளன. இதனால் அவற்றை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசிப்பதுடன், தங்களது கேமரா, செல்போனில் புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.
- வால்பாறையில் கடந்த மாதங்களில் இதமான காலநிலை நிலவியதால், சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது.
- இரவு நேரங்களில் கடும் குளிர் நிலவினாலும், பகல் நேரங்களில் வெயில் தனது உக்கிரத்தை காட்டுகிறது.
வால்பாறை:
கோவை மாவட்டத்தில் உள்ள மிக முக்கியமான சுற்றுலா தலங்களில் ஒன்று வால்பாறை.
இங்குள்ள தேயிலை தோட்டங்கள், இங்கு நிலவும் சீதோஷ்ண நிலையை அனுபவிக்க நாள்தோறும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் அதிகளிலான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் இருப்பர்.
அரசு விடுமுறை தினங்கள், வாரவிடுமுறை நாட்களில் இங்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருவர். அவ்வாறு வருபவர்கள் தேயிலை தோட்டங்களை கண்டு ரசித்தும், வால்பாறையில் உள்ள கூழாங்கல் ஆறு உள்ளிட்டவற்றையும் பார்த்து செல்கின்றனர்.
வால்பாறையில் கடந்த மாதங்களில் இதமான காலநிலை நிலவியதால், சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது. இதனால் சுற்றுலா தொழிலை நம்பியிருக்கும் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக வால்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் கூழாங்கல் ஆறு, வெள்ளமலை ஆறு, சின்னக்கல்லாறு, இறைச்சிப்பாறை அருவி, அணைகளிலும் நீர்வரத்து குறைந்து வருகிறது.
இரவு நேரங்களில் கடும் குளிர் நிலவினாலும், பகல் நேரங்களில் வெயில் தனது உக்கிரத்தை காட்டுகிறது. இதனால் வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. விடுமுறை தினங்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கூட சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை குறைந்த அளவே இருந்ததை பார்க்க முடிந்தது.
- கடை, வீடுகளில் உணவுக்காக மக்களையும், சுற்றுலா பயணிகளையும் பயமுறுத்தும் சம்பவம் நடக்கிறது.
- குரங்குகள் நகருக்குள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரத்தில் தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள அர்ச்சுனன் தபசு பின்புறம் வெண்ணை உருண்டைக்கல் பாறை வளாகத்தில் பல்வேறு குடவரை சிற்பத்தூண்கள், பாறை வடிவிலான குளியல் தொட்டிகள் என பல்லவர் காலத்து சிலைகள் கற்களுடன் கூடிய மலைப்பகுதி உள்ளது. இங்கு மயில், குரங்கு, கீரிப்பிள்ளை, உடும்பு உள்ளிட்ட பல்வேறு உயிரினங்கள் வாழ்கிறது.
இவை சில நேரங்களில் உணவுக்காக வெளியே ஊருக்குள் வரும்போது வாகனங்களில் அடிபட்டு இறப்பதும், வீடுகளுக்குள் புகுந்து உணவுகளை தின்னும் சம்பவங்களும் அடிக்கடி நடப்பது வழக்கம். தற்போது குரங்குகள் நகரப்பகுதியில் உள்ள கடை, வீடுகளில் உணவுக்காக மக்களையும், சுற்றுலா பயணிகளையும் பயமுறுத்தும் சம்பவம் நடக்கிறது.
இதுகுறித்து பொதுமக்கள் தொல்லியல்துறை அதிகாரிகளிடம் புகார் கொடுத்தால் அவர்கள் வனத்துறையிடம் கூறுங்கள் என சொல்வதாகவும், வனத்துறையினர் திருக்கழுக்குன்றம் அலுவலகத்தில் இருந்து மாமல்லபுரம் வந்து இவைகளை கண்காணிப்பது இல்லை எனவும் பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இதனால் வனத்துறை அதிகாரிகள் மாமல்லபுரம் வெண்ணை உருண்டைக்கல் பாறை வளாக மலைப்பகுதியை கண்காணித்து அங்கிருந்து குரங்குகள் நகருக்குள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
- ஊட்டி தொட்டபெட்டா சிகரத்திலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.
- காணும் பொங்கலையொட்டி நீலகிரி மாவட்டத்தில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
ஊட்டி:
பொங்கல் பண்டிகையின் முக்கிய நிகழ்வான காணும் பொங்கல் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது. காணும் பொங்கல் அன்று பொதுமக்கள் உறவினர் இல்லங்களுக்கும், பொழுதுபோக்கு மையங்கள், சுற்றுலா தலங்களுக்கு சென்றும் பொழுதை போக்குவது வழக்கம்.
பொங்கல் விடுமுறையையொட்டி நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்களில் கடந்த 2 நாட்களாகவே சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
இன்று காணும் பொங்கல் என்பதால் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்தது. ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவுக்கு வந்த சுற்றுலா பயணிகள் அங்குள்ள இத்தாலியன் பூங்கா, பெரணி இல்லம், இலை பூங்கா போன்றவற்றை பார்வையிட்டனர்.
மேலும் கண்ணாடி மாளிகையில் பூத்து குலுங்கிய பல்வேறு வகையான பூக்களையும் கண்டு ரசித்ததோடு அதன் முன்பு நின்று செல்பி புகைப்படமும் எடுத்து மகிழ்ந்தனர்.
அங்குள்ள புல்வெளி மைதானத்தில் குடும்பத்துடன் அமர்ந்து பேசி பொங்கல் விடுமுறையை கொண்டாடினர்.
இதேபோன்று ஊட்டி தொட்டபெட்டா சிகரத்திலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. அங்குள்ள தொலைநோக்கி இல்லத்தில் உள்ள நவீன தொலைநோக்கிகள் மூலம் ஊட்டி நகரம் மற்றும் பல்வேறு பகுதிகளை சுற்றுலா பயணிகள் பார்வையிட்டனர்.
ஊட்டியில் உள்ள ரோஜா பூங்கா, பைக்கார படகு இல்லம், பைக்கார நீர்வீழ்ச்சி, ஊட்டி படகு இல்லம், கோத்தகிரி நேரு பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, முதுமலை புலிகள் காப்பகம் உள்ளிட்ட அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் குவிந்து காணும் பொங்கலை தங்கள் குடும்பத்தினர், உறவினர்களுடன் கொண்டாடி மகிழ்ந்தனர். காணும் பொங்கலையொட்டி நீலகிரி மாவட்டத்தில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
கோவை மாநகரில் தற்போது புதிதாக திறக்கப்பட்டுள்ள செம்மொழி பூங்காவுக்கு இன்று காலை முதலே ஏராளமான மக்கள் தங்கள் குடும்பத்தினருடன் வந்தனர். அவர்கள் அங்குள்ள 23 வகையான தோட்டங்கள், செயற்கை நீரூற்று உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்களையும் கண்டு ரசித்தனர். அத்துடன் அதன்முன்பு நின்று செல்பி புகைப்படமும் எடுத்து மகிழ்ந்தனர்.
செம்மொழி பூங்காவில் உள்ள குழந்தைகள் பூங்காவில் குழந்தைகள் தங்கள் பெற்றோருடன் உற்சாகமாக விளையாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாகவே காணப்பட்டது.
பொள்ளாச்சி ஆழியார் அணை, ஆழியார் அணை பூங்காவிலும் இன்று சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.
கோவை மட்டுமின்றி வெளிமாவட்டங்களில் இருந்தும் வந்திருந்த சுற்றுலா பயணிகள் ஆழியார் அணையின் இயற்கை அழகை கண்டு ரசித்ததோடு, அதன் அருகே உள்ள பூங்காவில் குழந்தைகளுடன் உற்சாக விளையாடி விடுமுறையை கழித்தனர்.
இதேபோன்று கோவை குற்றாலம், குரங்கு நீர்வீழ்ச்சி, வால்பாறை, டாப்சிலிப் யானைகள் முகாம், கோவை மாநகரில் உள்ள வ.உ.சி. உயிரியல் பூங்கா, உக்கடம் பெரிய குளம், சிறுவர் பூங்கா, வாலாங்குளம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்துடன் குவிந்து பொங்கல் விடுமுறையை கொண்டாடினர்.
காணும் பொங்கலையொட்டி கோவை மாநகரில் போலீஸ் கமிஷனர் கண்ணன் தலைமையில் 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். புறநகரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- குணா குகைக்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
- சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் வரும் நாட்களில் அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது
புத்தாண்டு, பொங்கல் விடுமுறையை ஒட்டி கொடைக்கானலில் கூட்டம் அலைமோதுகிறது. வெள்ளி நீர்வீழ்ச்சி, கோக்கர்ஸ் வாக், குணா குகை, தூண்பாறை, மோயர்பாண்ட், பைன்பாரஸ்ட், பசுமை பள்ளத்தாக்கு, அப்சர்வேட்டரி, ரோஜா பூங்கா, பிரையண்ட் பூங்கா உள்ளிட்ட இடங்களிலும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் வரும் நாட்களில் அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது
இந்நிலையில், கொடைக்கானலில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலாத் தலங்களின் நுழைவுக் கட்டணம் இனி ஆன்லைன் முறையில் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொடைக்கானலில் குணா குகை, துன்பாறை, மோயார் சதுக்கம், பேரிஜம் ஏரி, பைன் காடுகள் ஆகிய பகுதிகளுக்கான நுழைவுக் கட்டணம் இனி ஆன்லைன் மூலம் மட்டுமே வசூல் செய்யப்படும் என்றும் நேரடிப் பணமாக இனி வசூலிக்கப்படாது என வனத்துறை தெரிவித்துள்ளது
- வேளாங்கண்ணி பேராலயத்துக்கு சொந்தமான இடத்தில் ஹெலிபேட் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
- பெங்களூருவில் இருந்து பிரத்யேக ஹெலிகாப்டர் வேளாங்கண்ணிக்கு வர உள்ளது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டத்தில் உலக பிரசித்தி பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயம், நாகூர் ஆண்டவர் தர்கா, சிக்கல் சிங்காரவேலவர் கோவில் உள்ளிட்ட பல்வேறு ஆன்மிக சுற்றுலாத் தலங்கள் உள்ளன. இது தவிர கோடியக்கரை பறவைகள் சரணாலயம், நீண்ட நெடிய கடற்கரை, தமிழகத்தின் உயரமான நாகை கலங்கரை விளக்கம் ஆகியவையும் நாகையில் உள்ளன.
இதனால் சுற்றுலாத் துறையை மேம்படுத்த நாகை மாவட்ட நிர்வாகம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் வகையில் வேளாங்கண்ணியில் ஹெலிகாப்டர் சேவை தொடங்கப்பட உள்ளது. உத்தரகாண்ட், காஷ்மீர் உள்ளிட்ட வடமாநிலங்களில் சுற்றுலா தலங்களை, ஹெலிகாப்டரில் சுற்றிப் பார்க்கும் வசதி உள்ளது. அதற்காகவே, அந்த மாநிலங்களுக்கு ஏராளமானோர் சுற்றுலா செல்கின்றனர்.
இதைப்போல சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் ஹெலிகாப்டர் சேவை தொடங்குவதற்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.
இதற்காக வேளாங்கண்ணி பேராலயத்துக்கு சொந்தமான இடத்தில் ஹெலிபேட் அமைக்கும் பணி நடந்து வருகிறது. வேளாங்கண்ணியை சுற்றி சுமார் 25 கிலோமீட்டர் வான் பரப்பளவில் ஹெலிகாப்டர் பறக்கும். இந்த ஹெலிகாப்டரில் மொத்தம் 6 பயணிகள் பயணிக்கலாம்.
ஒரு பயணிக்கு ரூ.6000 கட்டணமாக வசூலிக்கப்பட உள்ளது. இதற்காக பெங்களூருவில் இருந்து பிரத்யேக ஹெலிகாப்டர் வேளாங்கண்ணிக்கு வர உள்ளது.
வேளாங்கண்ணியில் இருந்து திருச்சி, சென்னை விமான நிலையத்துக்கும் ஹெலிகாப்டர் சேவை விரிவுபடுத்தப்பட உள்ளது. சுற்றுலா, பொழுதுபோக்கை தாண்டி இயற்கை பேரிடர் நிகழும் போதும், அவசர காலங்களில் ராணுவ ஹெலிகாப்டர்கள் வந்து இறங்கும் வசதியுடன் வேளாங்கண்ணியில் ஹெலிபேட் அமைக்கப்படுகிறது. ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட முக்கிய அரசியல் பிரபலங்கள், வி.ஐ.பி.க்கள், ராணுவத்தினர் பயன்படுத்தும் விதமாக இந்த ஹெலிபேடு அமைக்கப்படுகிறது.
இந்த ஹெலிகாப்டர் சேவை குறித்து ஜெயம் ஏவியேசன் என்ற நிறுவனம் நாகை மாவட்ட நிர்வாகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. ஹெலிகாப்டர் சேவை தொடங்குவது நாகை மாவட்டத்தின் சுற்றுலா வளர்ச்சியின் மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. வேளாங்கண்ணியில் இந்த ஹெலிகாப்டர் சேவை இந்த மாதம் இறுதியில் தொடங்க உள்ளது என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
- புதுச்சேரியில் சுற்றுலா பயணிகள் வசதிக்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
- சுற்றுலா பயணிகள் வசதிக்காக 10 இடங்களில் தற்காலிக வாகன நிறுத்து மிடங்கள்.
புதுச்சேரியில் புத்தாண்டை கொண்டாட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். சுற்றுலா பயணிகள் வருகையால் புதுச்சேரியில் தங்கும் விடுதிகள் நிரம்பி விட்டன.
தொடர்ந்து சுற்றுலா பயணிகள் புதுச்சேரிக்கு படையெடுப்பதால் நகர வீதிகள் எங்கும் சுற்றுலா பயணிகள் கூட்டம் கூட்டமாக இரு சக்கர வாகனம் மற்றும் கார்களில் வலம் வருகிறார்கள். இதனால் புதுச்சேரி முழுவதும் போக்குவரத்து நெரிசல் இருந்து வருகிறது.
நாளை மறுநாள் நள்ளிரவு கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெறுவதால் சுற்றுலா பயணிகள் வசதிக்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து புதுச்சேரி போக்குவரத்து சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நித்யா ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுச்சேரியில் புத்தாண்டை முன்னிட்டு, வருகிற 31-ந் தேதி இரவு கடற்கரை சாலை மற்றும் நகர மைய பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பெருமளவில் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
போக்குவரத்து ஒழுங்கு மற்றும் மக்கள் நலனை கருத்தில் கொண்டு 31-ந் தேதி மதியம் 2 மணி முதல் ஜனவரி 1-ந் தேதி காலை 9 மணி வரை, ஒயிட் டவுன் பகுதியின் உள்ளே வாகனங் கள் செல்ல அனுமதியில்லை.
புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக புதுச்சேரி கடற்கரை நோக்கி வரும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வசதிக்காக 10 இடங்களில் தற்காலிக வாகன நிறுத்து மிடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் தங்கள் வாகனங்களை தற்காலிக வாகன நிறுத்து மிடங்களில் நிறுத்திவிட்டு, அங்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ள கட்டணமில்லா பேருந்து சேவைகளை பயன்படுத்தலாம்.
கடற்கரைக்கு செல்ல 30 தற்காலிக சிறப்பு கட்டணமில்லா பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சுற்றுலாப் பயணிகள் எளிதில் வழிகாணும் வகையில், சுமார் 400 போக்குவரத்து வழிகாட்டி பலகைகள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், முக்கிய சந்திப்புகளில் சி.சி.டி.வி. கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- இன்று முதல் சுற்றுலா பயணிகள் அங்கு குளிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
- சுமார் 37 நாட்கள் தடைக்கு பின்னர் மணிமுத்தாறு அருவியில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் அம்பை அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள மணிமுத்தாறு அருவி மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.
இங்கு ஆண்டின் அனைத்து மாதத்திலும் தண்ணீர் விழும். இந்த அருவியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்வது வழக்கம்.
இதனிடையே வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மாஞ்சோலை, ஊத்து எஸ்டேட் பகுதிகளில் மழை பெய்து வந்ததன் காரணமாக மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கடந்த நவம்பர் மாதம் 18-ந்தேதி சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை சார்பில் அங்கு தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் புறநகர் பகுதிகளில் மலை ஓய்ந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அவ்வப்போது லேசான மழை பெய்து வந்ததால் மணிமுத்தாறு அருவியில் தொடர்ந்து நீர்வரத்து குறையாமல் இருந்து வந்தது.
இதன் காரணமாக ஒரு மாதத்திற்கும் மேலாக அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை நீட்டிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் மலைப்பகுதியிலும் மழை குறைந்து விட்டதன் காரணமாக இன்று அருவியில் நீர்வரத்து குறைந்து குளிப்பதற்கு ஏற்ற சூழல் உருவானது.
இதனால் இன்று முதல் சுற்றுலா பயணிகள் அங்கு குளிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது. சுமார் 37 நாட்கள் தடைக்கு பின்னர் மணிமுத்தாறு அருவியில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அதே நேரம் கிறிஸ்துமஸ் மற்றும் அரையாண்டு தேர்வு விடுமுறை தொடங்கி இருப்பதால் சுற்றுலா பயணிகள் அருவியை நோக்கி படையெடுக்க தொடங்கி உள்ளனர்.
- நீர்வரத்து சீரானவுடன் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
- அருவியில் குளிக்க வந்த சுற்றுலா பயணிகள் ஆழியார் வனத்துறை சோதனை சாவடியுடன் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
ஆனைமலை:
கோவை மாவட்டம் ஆழியார் அருகே கவியருவி உள்ளது.
இந்த அருவிக்கு கோவை மாவட்டம் மட்டுமின்றி வெளிமாவட்டங்களில் இருந்தும் அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள்.
விடுமுறை நாட்களில் கவியருவியில் கூட்டம் அலைமோதும். சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்தினருடன் கவியருவியில் குளித்து மகிழ்ந்து செல்வர்.
இந்த நிலையில் ஆனைமலை சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு முதல் கனமழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதி உள்ள வால்பாறை கவர்கல், காடம்பாறை போன்ற பகுதிகளிலும் இரவு முதல் அதிக அளவில் மழை பெய்தது.
இந்த மழை காரணமாக ஆழியார் கவியருவில் திடீரென இன்று அதிகாலை காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அத்துடன் தண்ணீர் செந்நிறமாக ஆர்ப்பரித்து கொட்டியது.
தொடர்ந்து அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு நலன் கருதி அருவிக்கு செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது.
நீர்வரத்து சீரானவுடன் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதனால் அருவியில் குளிக்க வந்த சுற்றுலா பயணிகள் ஆழியார் வனத்துறை சோதனை சாவடியுடன் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
தற்போது மழை பெய்து கொண்டிருப்பதால், வால்பாறை செல்லும் சுற்றுலா பயணிகள் மலைப்பாதையில் அதிக கவனத்துடன் செல்ல வேண்டும். ஆங்காங்கே மலைகளில் இருந்து அருவி போல் நீர் வந்து கொண்டிருப்பதால் அவற்றுக்கு அருகே நின்று புகைப்படம் மற்றும் செல்பி எடுக்கக் கூடாது எனவும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
உடுமலை சுற்றுவட்டார பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு பலத்த மழை பெய்தது. இந்த மழை காரணமாக திருமூர்த்திமலை மலைமேலுள்ள பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அடிவாரத்தில் அமைந்துள்ள அமணலிங்கேஸ்வரர் கோவில் அருகில் செல்லும் தோணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கோவில் வளாகத்தை வெள்ளம் சூழ்ந்து செல்கின்றது. இதனால் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை.
தொடர் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் கோவில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
- உறைபனி காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது.
- வேலைக்கு செல்வோர், வேலைக்கு செல்ல முடியாமல் வீடுகளிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் தொடங்கி பிப்ரவரி மாதம் வரை பனிக்காலம் நிலவுவது வழக்கம். குறிப்பாக டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் உறைபனி அதிகளவில் காணப்படும்.
இந்த ஆண்டு 40 நாட்கள் கழித்து தாமதமாக கடந்த 12-ந்தேதி உறைபனி தொடங்கியது. அதனை தொடர்ந்து சில நாட்களாகவே ஊட்டி, குன்னூரில் உறைபனி கொட்டி வருகிறது.
இன்றும் குன்னூர், ஊட்டி, மஞ்சூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடும் உறைபனி காணப்பட்டது. குறிப்பாக தலைகுந்தா, அவலாஞ்சி பகுதிகளில் அதிகளவில் உறைபனி கொட்டியது.
இன்று தலைக்குந்தா, அவலாஞ்சி பகுதிகளில் மைனஸ் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி இருந்தது.
ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் அதிகபட்சமாக 4.3 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக மைனஸ் 8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகி இருந்தது.
கொட்டும் உறைபனியால் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, தலைகுந்தா, படகு இல்லம், பைக்காரா, குதிரை பந்தய மைதானம், குன்னூர் ஜிம்கானா மைதானம் உள்ளிட்ட புல்வெளி மைதானங்கள் வெள்ளை கம்பளம் போர்த்தியது போன்று ரம்மியமாக காட்சியளித்தது. அங்குள்ள செடி, கொடிகள் மீது பனி படர்ந்து காணப்பட்டது.
இதுதவிர சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கார், வேன், ஆட்டோ மற்றும் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களிலும் உறைபனி காணப்பட்டது. வாகன ஓட்டிகள் காலையில் உறைபனியை அகற்றி வண்டியை எடுப்பதற்குள் சிரமப்பட்டனர்.
குன்னூர் பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள கேரட், பீட்ரூட் உள்ளிட்ட பயிர்கள் மீதும் வெள்ளை கம்பளம் விரித்தது போன்று உறைபனி காணப்பட்டது. இதனால் பயிர்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இந்த உறைபனி காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. குறிப்பாக அதிகாலையில் தேயிலை தோட்டங்கள், காய்கறி தோட்டங்களுக்கு வேலைக்கு செல்வோர், வேலைக்கு செல்ல முடியாமல் வீடுகளிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளான பால் உள்ளிட்ட பொருட்கள் வாங்குவதற்கு கூட பொதுமக்கள் அதிகாலையில் வெளியில் வர முடியவில்லை.
இதனால் ஊட்டி, குன்னூரில் உள்ள முக்கிய பஜார் பகுதிகளில் காலை நேரத்தில் வெறிச்சோடி காணப்பட்டது.
பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகளும் கம்பளி ஆடைகளை அணிந்து கொண்டு செல்வதை காண முடிந்தது. வெளியில் நடமாடிய ஒரு சிலரும் போர்வை, கம்பளி ஆடை, சுவர்ட்டர், சால்வை உள்ளிட்டவற்றை அணிந்தபடி சென்றனர்.
குளிரில் இருந்து பாதுகாத்து கொள்ள பெரும்பாலானோர் தங்கள் வீடுகள் முன்பு தீ மூட்டி குளிர் காய்ந்து வருகின்றனர். இருந்தபோதிலும் குளிர் வாட்டி வதைத்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. தொடர்ந்து கொட்டி வரும் உறைபனியால் தேயிலை செடிகள், மற்றும் மேரக்காய் பந்தல்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஊட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நிலவி வரும் உறைபனி தாக்கம் காரணமாக நீலகிரிக்கு சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்து விட்டது. விடுமுறை தினங்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கூட குறைந்த அளவிலான சுற்றுலா பயணிகளே வந்திருந்தனர். அவர்களும் உறைபனி காரணமாக வெளியில் வரமுடியாமல் விடுதிகளுக்குள்ளேயே முடங்கினர். உறைபனி குறைந்த பிறகே வெளியில் சென்று சுற்றுலா தலங்களை பார்வையிட்டு, சீதோஷ்ண நிலையை அனுபவித்தனர்.






